Header Ads

Breaking News
recent

ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய கருத்தரங்கு

ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த தேசிய கருத்தரங்கை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அப்போது அவர், நாடு வளர்ச்சி அடைய பொருளாதார முன்னேற்றம் தேவை என்று கூறினார்.
அப்துல் கலாம் பங்கேற்பு
ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும்(சி.வி.ஆர்.டி.இ), விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்திய கண்டிஷன் மானிட்டரிங் நிறுவனமும் இணைந்து நடத்தும் 2 நாள் தேசிய கருத்தரங்கம் ஆவடியில் உள்ள போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் சி.வி.ஆர்.டி.இ.யில் மரக்கன்று நட்டு, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய அர்ஜூன் மார்க்–2 பிரதான கவச ஊர்தியை பார்வையிட்டார்.
பின்னர் கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் இடையே உரையாற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அப்துல்கலாம் கூறியதாவது:–
இணையதளம் மூலம் கண்காணிப்பு
ஒரு மனிதனின் உடல் நலத்தை பாதுகாப்பது போல் நாட்டின் பாதுகாப்புத் துறை தொடர்பான போர் ஊர்திகள் ஆய்வகத்தில் தொழில் நுட்ப அம்சங்களை இணையதளம் மூலம் கண்காணித்து மேம்படுத்த வேண்டும். 1970–ல் ராக்கெட் ஏவும் போது பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை நாம் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இன்று தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
எனவே பாதுகாப்புத்துறை வாகனம் வடிவம் முதல் அது செயல்பாட்டுக்கு வரும் வரை இணையதளம் மூலம் கண்காணிக்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை எதிரிகள் கைப்பற்றி வருகின்றனர். இதை தடுக்க கண்காணிக்க வேண்டும்.
பொருளாதார முன்னேற்றம்
நாடு வளர்ச்சி அடைய பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில் நுட்பத்தில் அறிவு சார்ந்த முன்னேற்றம் தேவை. அறிவு சார்ந்த விஷயங்களை நிறைய படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.