Header Ads

Breaking News
recent

பிறருக்கு உதவும் பண்பை மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

பிறருக்கு உதவும் பண்பை மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் ரொக்க பரிசுகளை வழங்கினார்

மாணவிகள்

மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் நலவிழா நடத்தப்பட்டது. விழாவில் 2013-2014ம் கல்வியாண்டில் எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த மாணவிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

1962-ம் ஆண்டு டிசம்பர் 18ம் நாள் சிறுபான்மையினர் நல ஆணையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் நாள் சிறுபான்மையினர் நல விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நல ஆணையம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் சிறுபான்மையினர் சமுதாயத்தினர்களின் பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையின சமுதாயத்தினர்கள் சமூக, பொருளாதார கல்வியில் மேம்படுவதற்காக பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

பரிசு

மாநில, மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு மாநில அரசால் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், அவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று, சமுதாயத்தில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான். மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெறுவதோடு மட்டுமல்லாமல், பிறரை மதிக்கவும், உதவும் பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும் கல்வி பயின்றால் வாழ்வில் உயர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் செயிண்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்தர்மேரி, பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலானா மவுலவி ஹாஜி முகமதுரபீக், பள்ளி முதல்வர் ஆஞ்சலோரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வைத்தியலிங்கம் வரவேற்று பேசினார். பள்ளி ஆசிரியை ஜோசபின் வயலட் ராணி நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.