Header Ads

Breaking News
recent

குழந்தைகளின் மனங்களைப் பண்படுத்துவது இலக்கியங்களே.: குழந்தை இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -

 வந்தவாசி.அக்.02. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற குழந்தை இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகைப் புரிந்துகொண்டு எழுதப்படுகிற இலக்கியங்களால்தான் குழந்தைகளின் பிஞ்சு மனங்களைப் பண்படுத்திட முடியும் என்று கவிஞர் மு.முருகேஷ் குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு தலைமையாசிரியர் க.சண்முகம்  தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.  

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ' குழந்தைகளல்ல குழந்தைகள் ' குழந்தை இலக்க்கிய நூலை வசந்தா அம்பலவாணன் வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படியை நகர்மன்ற உறுப்பினர் ஏ.மணிகண்டன், க.யுவராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

ஏற்புரையில் நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, இன்றைய தமிழிலக்கிய சூழலில் குழந்தை இலக்கியப் படைப்புகள் என்பவை இன்னும் பெரிய அளவில் கவனிப்பையும் போதிய அக்கறையையும் வெளிப்படுத்துவதாய் இல்லை. மற்ற இலக்கிய வகையைப்போலின்றி, குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது சற்றே கடினமான ஒன்று.

குழந்தைகளின் வாசிப்பு ஆர்வம், விருப்பம் எதைச் சார்ந்ததாய் இருக்கிறது என்பதை அறியாமல் குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியாது. நமக்குப் பிடித்தவை குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது.

நாமும் நம்மை ஒரு குழந்தையென பாவித்து, அவர்களின் மனவுலகத்திற்குள் சென்று படைப்பதன் மூலமாகவே குழந்தை இலக்கியத்தில் நல்ல பல படைப்புகளைத் தர முடியும் என்றார்.

நிறைவாக, மு.ஜீவா நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.