Header Ads

Breaking News
recent

தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்

சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ், செயலாளர் கே.எம்.மூர்த்தி, பொருளாளர் காளிதாஸ், தனியார் பள்ளிச் சங்கச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விசாரணை என்ற நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாணவர்களின் தேர்ச்சி என்பது ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரை மட்டும் சார்ந்தது அல்ல. மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு தவறாமல் வந்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பள்ளிக்கு வராமல், எப்போதாவது பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள். குறிப்பாக அரசுப் பள்ளியில் எந்தப் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லையோ, அந்தப் பாடத்தில் மட்டுமே அதிகமான மாணவர்கள் தோல்வியுற்றுள்ளார்கள்.

சென்ற கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெறாமல் 99.75 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெறச் செய்த ஆசிரியர்களும் கண்டிப்பாக பயிற்சிக்கு வந்து விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 250 மாணவரில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும் அந்தப் பாடத்தின் ஆசிரியரின் பணி சரியில்லை எனக் கூறுவது சரியில்லை.

100 சதவீதம் தேர்ச்சி காட்டாதவர்களுக்கு பயிற்சி என்பதைவிட, தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்திற்கு குறைவான பாட ஆசிரிர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் முதுகலை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், மன உளச்சலுக்குள்ளாக்குவது போல பயிற்சி, விசாரணை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்படுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே இந்தப் பயிற்சியை ரத்து செய்துவிட்டு, 60 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி விகிதம் காட்டியுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.