Header Ads

Breaking News
recent

சிறுபான்மை இன மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை


பிளஸ்-1 படிக்கும் சிறுபான்மை இன மாணவிகள் மவுலானா ஆசாத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள், ஜெயின் மதங்களை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் திட்டம் மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மை இன மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். நடப்பாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11-ம் வகுப்பு படிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

வருகிற 30-ந்தேதிக்குள்...

மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவன ஊழியர்கள் சிறுபான்மை மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவிகள் நடப்பாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.