Header Ads

Breaking News
recent

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை ரங்கசாமி உறுதி

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பிரச்சினைகள் வருமாறு:-

பாசிக்கில் நஷ்டம்

புருஷோத்தமன் (அ.தி.மு.க.): பாசிக் நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்களாக 387 பேரும், தினக்கூலி ஊழியர்களாக 251 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். உழவகரம், மினரல் வாட்டர், கட்டிடம், போர்வெல், தோட்டக்கலை, கம்போஸ்ட் உரம் தயாரிப்பு, மதுபானக்கடை போன்ற பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில் மதுபான கடையைத்தவிர அனைத்தும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இப்பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தருவதில்லை. 2012-13ல் 9மாத சம்பள பாக்கியும், 2013-14ல் 9மாத சம்பள பாக்கியும் நிலுவையில் உள்ளது. மொத்த சம்பளத்தொகையில் 40 சதவீதம் பிடித்தம் செய்துவிட்டு 60 சதவீத தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. முழுச்சம்பளம் வழங்காததால் பி.எப். பிடித்தம் செய்யப்படவில்லை. 2013 முதல் பஞ்சப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நிர்வாகத்தை சீரமைக்க ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நியமிக்கப்பட்டு 1½ வருடங்கள் ஆன நிலையில் அவர் எந்தவித அறிக்கை கொடுத்துள்ளார்? அதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பேராசிரியர் பணியிடங்கள்

அன்பழகன் (அ.தி.மு.க.): புதுவை மாநிலத்தில் உள்ள 7அரசு கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் பல வருடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணியிடங்கள் காலியாகும்போது உடனடியாக நிரப்ப மாநில அரசு மத்திய தேர்வாணைக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும். பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 142பேராசிரியர் பணியிடத்தில் 39இடங்கள் காலியாக உள்ளன. இயற் பியல் பாடத்தினை 110மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு பேராசிரியர்தான் உள்ளார். போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனவே அரசு பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய தேர்வாணை குழுவையே நம்பியிருக்காமல் அரசு ஏதாவது செய்து பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.

ரங்கசாமி உறுதி

முதல்-அமைச்சர் ரங்கசாமி: பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சில நேரங்களில் இந்த பணியிடங்கள் காண்டிராக்ட் அடிப்படையிலும் நிரப்பப் படுகிறது. மாணவ, மாணவிகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு அதிக கவனம் செலுத்தும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Powered by Blogger.