Header Ads

Breaking News
recent

இந்த ஆண்டு 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்களை அனுமதித்துள்ளார். இதன்தொடர்ச்சியாக, 2014-15 ஆம் கல்வியாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.
 இதில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2,489, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 952, உடற்கல்வி இயக்குநர் 18 என 3,459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15, விரிவுரையாளர் பணியிடங்கள் 40, இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள், 188 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
202 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்:
மாற்றுத்திறன் கொண்ட அனைத்து குழந்தைகளுக்காக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் மாநில ஆதார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரமான கல்வி வழங்கும் பொருட்டு ரூ.5.35 கோடி செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் வீரமணி.

No comments:

Powered by Blogger.