Header Ads

Breaking News
recent

அண்ணாமலைப் பல்கலை. வேளாண் படிப்பிற்கான கவுன்சிலங் தொடங்கியது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வி ஆண்டிற்கான பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் திங்கள்கிழமை தொடங்கியது. கவுன்சிலிங் ஜூலை 16-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.


11,647 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கு 11,647 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் 11,002 பேர் ஆவார்கள். 2014-15 கல்வி ஆண்டில் பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்க மாற்றுத் திறனாளிகள் 38 பேர் உள்ளிட்ட 1058 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.



முதல் 3 ரேங்க்குகளை பெற்ற மாணவ, மாணவியர்கள்: முதல்நாள் கவுன்சிலிங்கில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா ராஜமன்னார் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.பிரயதர்ஷினி (கட-ஆஃப் 196.50) முதல் ரேங்கினையும், ஈரோடு மாவட்டம் நஞ்சப்பம் ஐயங்கட்டிதோட்டத்தைச் சேர்ந்த என்.எஸ்.தரணி (கட்-ஆஃப் 196.25) இரண்டாவது ரேங்கினையும், அரியலூர் மாவட்டம் நாகமங்களத்தைச் சேர்ந்த கே.பரணீதரன் (கட்-ஆஃப் 196.25) மூன்றாவது ரேங்கினையும் பெற்று அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.



அனுமதி சேர்க்கை ஆணை: கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணையினை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், வேளாண்புல முதல்வருமான முனைவர் ஜே.வசந்தகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி .ரகுபதி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத், கல்வியியல் புல முதல்வர் ஜி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 2927 பேர் அழைப்பு: ஜூலை 15-ம் தேதி நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு 963 மாணவ, மாணவியர்களுக்கும், 16-ம் தேதி நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு 906 மாணவ, மாணவியர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்விற்கு மொத்தம் 2927 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.