Header Ads

Breaking News
recent

மூன்றாண்டு பட்டப் படிப்புத் திட்டம்: தில்லி பல்கலை. வகுப்புகள் இன்று தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டுக்கான மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்க உள்ளன.

 2013-14 கல்வியாண்டில் நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தை தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலையிட்டதைத் தொடர்ந்து, நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டத்தை தில்லி பல்கலைக்கழகம் ரத்து செய்தது. மேலும், 2014-15 கல்வியாண்டில் மூன்றாண்டு பாடத் திட்டமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அமைப்பினர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

 இதையடுத்து, தில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 64 உறுப்புக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந் நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 21) மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

 இதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்லூரிகளில் விதிமுறைகள், பாடத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் தில்லி பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள் சார்பில் வழிகாட்டுதல் பயிற்சிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
 இது குறித்து ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.கே.ஜெயின் கூறுகையில், எங்கள் கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளுகளில் இக் கல்வியாண்டில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்க உள்ளன. எனவே, கல்லூரியின் நடைமுறைகள், அவர்களுக்குரிய பாடவேளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன என்றார்.

 மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதல்வர் பிரதீபா ஜாலி கூறுகையில், எங்கள் கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்லூரி நடைமுறைகள், புதிய பாடத் திட்டங்கள், பாடவேளைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் எங்கள் கல்லூரி இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இது தவிர காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களுக்கு பின் கல்லூரி திறக்கப்படவுள்ள நிலையில், இக் கல்வியாண்டை நம்பிக்கையுடன் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 மேலும், தில்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடித்து வருவதையடுத்து கல்லூரிகளில் தாற்காலிக அடிப்படையில், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணிகளையும் தில்லி பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.

 புதிய பாடத் திட்டத்துக்கு ஒப்புதல்:  இதற்கிடையே தில்லி பல்கலைக்கழக கல்விக் குழு மற்றும் நிர்வாக கவுன்சில் குழுக்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது நான்காண்டுக்கு பதிலாக மூன்றாண்டு பட்டப் படிப்புத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 கண்டனம்: இது குறித்து தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் நந்திதா நரேன் கூறுகையில், மூன்றாண்டு பட்டப் படிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும், கல்லூரிகள் திறக்க இரண்டு நாள்களுக்கு முன்புதான் பல்கலைக்கழக கல்விக் குழு மற்றும் நிர்வாகக் குழு ஆகியவை மாணவர்களுக்கான புதிய பாடத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம். இது தவிர இக் கூட்டத்தில் புதிதாக 5 பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூட்டமைப்பிடம் ஆலோசனை நடத்தாமல் அனுமதி அளித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

No comments:

Powered by Blogger.