Header Ads

Breaking News
recent

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று 3 மாதத்துக்குள் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவிகளிடம் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.இதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. கல்லூரி நுழைவு வாயிலுக்கு பூமாலை போடும் போராட்டம், தலையில் கறுப்பு துணியால் முக்காடு அணிந்து போராட்டம், தெருமுனை பிரசாரம், கல்லூரி நுழைவு வாயில் கதவு பூட்டை உடைக்கும் போராட்டம், மண் சோறு உண்ணும் போராட்டம் என்று பேராடினார்கள்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இதனைத்தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த மாணவ-மாணவிகளை அரசியல் கட்சி தலைவர்கள், பொதுநல அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் என பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்த மாணவ-மாணவிகளை சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கூறினார். அப்போது அவர் கூறுகையில், ‘அரசு உதவி பெறும் கல்லூரியான சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று இன்னும் 3 மாதத்துக்குள் அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என்றார். எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் தொடர் உண்ணாவிரதத்தை கைவிட சம்மதித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் உண்ணாவிரதம் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் சிகிச்சைக்காக ஒரு வேனில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது தமிழ்நாடு துணி நூல் பதனிடும் ஆலை மாநில தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி, கவுன்சிலர்கள் சக்தி என்ற சிவசுப்பிரமணியன், தங்கமுத்து உள்பட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Powered by Blogger.