Header Ads

Breaking News
recent

இசைப் பல்கலை.க்கு 32 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு துணைவேந்தர் காயத்திரி பேச்சு


தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகத்துக்குத் தமிழக முதல்வர் 32 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈ. காயத்திரி.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
இசைத் துறை மாணவர்கள் நிறைய உழைக்க வேண்டும். இந்தத் துறையில் தகுதி இருந்தாலும் கூட கடின உழைப்பும் இருந்தால்தான் முன்னேற்றம் கிடைக்கும். எனவே, இசையில் பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
 நான் அதிகாலை 3 மணிக்கே எழுந்து வீணை இசைப் பயிற்சி மேற்கொள்வேன். இந்த உழைப்பும், பெற்றோர் தந்த ஊக்கமும்தான் இந்த நிலையை அடைய முடிந்ததற்குக் காரணம் என நம்புகிறேன்.
இசையிலும், யோகாவிலும் மேற்கொள்ளப்படும் பயிற்சி ஒன்றுதான். இசையிலும் யோகா போன்று மூச்சுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே, நேரடியாக இசைப் பயிற்சியே மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகத்தின் மீது தமிழக முதல்வருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஏராளமான திட்டங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார் முதல்வர். சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் இந்தப் பல்கலைக்கழகத்துக்காக 32 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இசை மட்டுமல்லாமல் நுண்கலை, கவின்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பல்கலைக்கழகம் பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார் காயத்திரி.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித்தார்.
தமிழிசையியல் வளர்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பங்கு என்ற நூலும், ஆறு படை வீடு திருப்புகழ் பாடல்கள் கொண்ட குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டன.
சென்னை ராமலிங்கர் பணி மன்றச் செயலர் மா. வயித்திலிங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகக் கலைப் புலத் தலைவர் இ. அங்கயற்கண்ணி வரவேற்றார். இசைத் துறை உதவிப் பேராசிரியர் இரா. மாதவி நன்றி கூறினார்.


No comments:

Powered by Blogger.