Header Ads

Breaking News
recent

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களின் தொடர் தர்ணா போராட்டம் வாபஸ்

சிதம்பரம், ஆக.9: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் தர்ணா போராட்டம் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வாபஸ் பெறப்பட்டது.

எஸ்சி., எஸ்டி மாணவர்கள் செலுத்தக்கூடிய எந்தவித கல்வி கட்டணத்திற்கும் அபராதம் கிடையாது என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், அரசிடம் இருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகையை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும், அரசாணை 92-ன் படி தமிழகஅரசு வழங்கியுள்ள ரூ.48 கோடி தொகையினை உடனே தலித் மாணவர்களுக்கு வழங்க வேண்டும், டிசி உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்கு ரூ.400 தொகை பெறுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 62 கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வளர்மதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் புல பிரிவு மாணவ, மாணவியர்கள் வியாழக்கிழமை முதல் கடந்த 2 தினங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படாததால், மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளை தவிர மற்ற அனைத்துதுறை வகுப்புகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை வெள்ளிக்கிழமை மாலை அறிவித்து, விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மாணவ, மாணவியர்கள் 14 பேர் கொண்ட குழுவினர், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா, பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், டி.எஸ்.பி ஆர்.ராஜாராம் மற்றும் புல முதல்வர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் நிறைவேற்றக்கூடிய ஒரு சில கோரிக்கைகளை 5 தினங்களுக்குள் நிறைவேற்றுவதாகவும், புதிதாக அளிக்கப்பட்ட 62 கோரிக்கைகளை நிறைவேற்ற புல முதல்வர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்வு காணப்பட்டதை அடுத்து மாணவர்கள், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்கு அரசு சிறப்பு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புடன் மாணவ, மாணவியர்கள் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Powered by Blogger.