Header Ads

Breaking News
recent

தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டண நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க கோரிய மனு தள்ளுபடி

மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக் கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை பெசன்ட்நகரை சேர்ந்தவர் எம்.சுவாமிநாதன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்போது ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. இந்த கல்லூரிகள் மருத்துவ படிப்புக்கு ரூ.35 முதல் ரூ.70 லட்சம் வரை கட்டணமாக வசூலிப்பதால், பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரிகள் கண் துடைப்புக்காக நுழைவு தேர்வுகளை நடத்தி மாணவர்களை சேர்க்கின்றன.

எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரி ஆகியவைகள் மாணவர்களிடம் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு ஒரு கமிட்டியை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, ‘மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஏற்கனவே கமிட்டி உள்ளது என்றும் கல்விக் கட்டணம் தொடர்பாக ஏதாவது புகார் இருந்தால் அதை இந்த கமிட்டி யிடம் தெரிவிக்கலாம் என்றும் இதுவரை எந்த ஒரு புகாரும் அந்த கமிட்டி முன்பு நிலுவையில் இல்லை’ என்று வாதிட்டார். ஆனால், மனுதாரர் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இப்படிப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

No comments:

Powered by Blogger.