Header Ads

Breaking News
recent

விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனைக் கூட்டம்: ஸ்மிருதி இரானி தகவல்

தேசிய கல்விக் கொள்கையை புதிதாக வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கேசவ் நினைவு கல்வி அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மாநில அளவிலும், பிராந்திய அளவிலுமாக இந்த கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலும், நமது தேசிய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று ஸ்மிருதி இரானி கூறினார். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் 1986-ஆம் ஆண்டு கல்விக் கொள்கை, தேசிய பெருமிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்மிருதி இரானி, புராதன இந்தியாவின் பெருமையை எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டினர் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் நமது இளைஞர்கள், நமது நாட்டின் மதிப்புமிக்கத் தலைவர்கள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு சார்பில் அடுத்த ஆண்டு, தாய் மொழி தினம் கொண்டாட திட்டமிடப்பட்டு வருவதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.